Monday, April 18, 2005

சொல் விளக்கம்

0) நூற்று மாத்திகள் = 100 meters

0a) கடுந்தொலை ஓட்டம் = marathon run

1) இடையிலா நகர்ச்சி = nonstop movement or motion

2) கசகு = chaos, கசங்கிக் குதறிக் குழம்பிக் கிடப்பது கசகு; இந்தச் சொல்லையே chaos என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறேன். இந்தப் பாவில் இனி வரும் கருத்துக்கள் சிலவற்றின் விரிவை James Gleick எழுதிய Chaos என்ற பொத்தகத்தில் அறியலாம்; அருமையான பொத்தகம்; வியக்க வைக்கும் செய்திகளை அறிவு பூர்வமாக அங்கே காணலாம். (இது ஒரு கார்டினல் வெளியீடு.)

3) இழுமிய விளைவு = linear effect

4) இழுமா விளைவு = nonlinear effect, கோடு என்பது இழுத்து வருவது (line); ஆயினும் அதற்கு வளைவு என்ற பொருளும் பழகு தமிழில் வந்துவிட்டது. இழுத்தலின் திரிபான இழுமித்தல் என்ற இன்னொரு சொல்லும் கோடுதல் என்பதற்கு இணையானதே; நாம் புரிகின்ற ஒரு செய்கையில் (process) ஒரு சாராத வேறி (independent variable)யை அதன் மதிப்பில் இருந்து கொஞ்ச விழுக்கிற்கு வேறுபட வைத்து, இந்த வேறுபாட்டின் விளைவால், சாருகின்ற வேறியும் (dependent variable) தன் மதிப்பில் அதே விழுக்கு வேறுபடுமானால், இத்தகைய உறவு உள்ள செய்கையை, இழுமியச் செய்கை (linear process) என்றும், கன்னா, பின்னாவென்று அளவிறந்து நிறைய விழுக்கு வேறுபடுமானால் இழுமாச் செய்கை (nonlinear process) என்றும் இன்றைய அறிவியலில் சொல்லுவார்கள்.

இழுமிய செய்கையில் அதன் சாய்வு (gradient) மாறாது இருக்கும்;

இழுமாச் செய்கையில் சாய்வு மாறிக் கொண்டு வரும் (gradient will keep changing).

இழுமாச் செய்கைகள் பலவும் அவற்றின் வாகு(behaviour)க்களால், இன்றைக்கும் அறிவியலில் புதிராகவே இருக்கின்றன. அதனால் பலரும் இந்தச் செய்கைகளை ஆழ்ந்து படிக்கிறார்கள். கணியின் பயன்பாடு கூடிய பிறகே இந்தப் படிப்பு ஓரளவு முன்வந்து இருக்கிறது.

5) சுழுமுனை = மூளையின் மூல ஆதாரத்தில் இருந்து உச்சித் துளை வரைக்கும் உள்ள நாடி என்பதற்கு, ஓகத்தில் (yoga) பயிலும் சொல்.

6) பூத வியல் = Physics

7) வேதியியல் = Chemistry

8) அளகையியல் = Logic; இதைத் தருக்கவியல், ஏதுசாற்றம் என்றும் சொல்வது உண்டு. இதன் வல்லமை நாவலந்தீவில் காஞ்சியில் சிறந்து இருந்ததால், புத்தர் காலத்திலேயே இதைப் படிக்க பலரும் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உண்டு. அளவையாடல் என்ற சொல்லாட்சி முந்நாளிலேயே இலக்கியங்களில் உண்டு.

Logic கும், Law வும் தொடர்பு உடையவை; அளவை என்பது law வையும் குறிக்கும். அளவு செய்யப்படுவது அளவை. அதாவது குமுகாயம் ஒன்றைச் சரி என்கிறது; இன்னொன்றை மறுக்கிறது; "இது அளவுற்றது; இது அளவொழித்தது" என்று வரையறுக்கிறது. நுண்ணிய வேறுபாடு காட்டுதற்காக logic ஐ அளகை என்றும், law வை அளவை என்றும் குறிக்கிறோம்.

9) நொதுமல் = neutral

10) கூவளை = convex

11) கூங்குவை = concave

12) வெப்பு = heat

13) வெம்மை = hotness. (வெதுமை = temperature. வெதுமை என்பது வெம்மையில் இருந்து மிகச் சிறிது வேறுபட்டதாகக் கொள்ளவேண்டும். சில்லீடு, பனிநிலை, குளிர், வெதுவெதுப்பு, சூடு, வெப்பம், கொதிநிலை எனப் பலவாறாக வெம்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறோம்.

தொடுவுணர்வால் அறியப்படும் இந்தச் சொற்களுக்கு ஒரு அளவு கோலின் வழி எண்ணிய வெளிப்பாடு (numerical representation) கொடுப்பதே வெதுமை எனப்படும். காட்டாக, பனிநிலையைச் சுழி என்றும், கொதிநிலையை நூறு என்றும் கொள்ளுவது ஒரு வகை வெதுமை அளவுகோல் temperature scale. இதை நூறலகுக் கோல் (centigrade scale) என்கிறோம். Temperature is minutely different from hotness. It is a numerical representation of qualitative aspects of hotness.)

14) உப்புதல் = expansion of the volume

15) கிடுகிய நிலை = critical state (என்னங் காணும், இப்படியா கிடுக்குப் பிடி போடுவாங்க!)

[இன்னதென்று சொல்ல முடியாமல் இங்குமல்லாமல் அங்குமல்லாமல் கிடுக்கப் பட்டநிலை கிடுகிய நிலை. கிடுகிய நிலையில் ஒரு பொருளை நீர்மம் (liquid) என்றும் சொல்ல முடியாது; வளிமம் (gas) என்றும் சொல்ல முடியாது. எனவே கிடுகிய நிலைக்கு மீறிக் கிடக்கும் வாகையை பாய்ம வாகை fluid phase என்று அறிவியலில் சொல்லுகிறோம்.]

16) பொக்குளம் = bubble

17) வாகை = வாகு என்ற சொல்லின் திரிவாய்ப் பிறந்தது; phase என்ற சொல்லை இங்கு இது குறிக்கும். (Here the liquid phase is turning into vapour phase); வாகு = behaviour

18) முழுமுதல் = absolute

19) சீரிதாய் அளத்தல் = precise measurement (சீர்மை/சீரிமை = precision; ஓரிமை =
uniformity)

20) விளிம்பிலாத் தொலைவு = infinite distance; விளிம்பு = finite; விளிம்பிலி =
infinity; கந்திலி என்றும் சிலர் infinity பற்றிச் சொல்லுவது உண்டு. அதுவும் நல்ல சொல்லாக்கமே; கந்து என்பது பற்றுக்கோல்; அடிமரம்.

கந்து>கந்தன் = வாழ்விற்குப் பற்றுக்கோடு ஆனவன், முருகன்.

கந்தை வைத்தே கந்தனைத் தொழுத காலம், காட்டு விலங்காண்டிக் காலம்; கந்திற்பாவை என்ற சொல்லாட்சியைச் சிலம்பில் காணலாம். மரங்களின் அடியில் இறைவனைத் தொழுத காரணத்தால் ஆலமர் செல்வன், கந்தன், கடம்பன் போன்ற சொற்கள் எழுந்தன. இன்றைக்கும் கோயில் மரம் என்ற கருத்து தென்னாட்டவர் மனத்தில் ஆழ்ந்து இருப்பதை உணரலாம்.

கந்தில் படர்ந்த கொடி வள்ளிக் கொடி, எனவே அவன் தேவி வள்ளியானாள்.

வள்ளிக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.
கந்தில் இருந்து பிறந்த இன்னொரு சொல் கந்தழி. கந்து>கந்தழி = நெருப்பு. தான் பற்றிய கோலையே அழிப்பது.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே!

என்று தொல்காப்பிய நூற்பா 1034 ல் குறிப்பிடப் பெறும். கொடிநிலை என்பது மாறாது நிலைத்து நிற்கும் ஞாயிற்றையும், கந்தழி என்பது மேலே சொன்னவாறு நெருப்பையும், வள்ளி என்பது (வளர்ந்தும் அமைந்தும் ஒளிதரும்) நிலவையும் குறிக்கும். இவைதாம் தமிழர்களின் முதல் மூன்று கடவுள்கள். அதனால் தான் அவை 'முதலன மூன்றும்' என்று குறிக்கப் பெற்றன. வள்ளை = வளர்ந்தும் அமைந்தும் ஒளி தரும் நிலவு. இந்த மூன்றும் மூவேந்தர்களுக்கு முறையே முன்னவர்களாகச் சொல்லப் பெறும். (இந்தச் செய்திகளை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை பக்கம் 27 ல் அறியலாம்.) சிலம்பில், தொல்காப்பிய மரபுப்படி, திங்களைப் போற்றி, ஞாயிறைப் போற்றித் தொடங்கும் இளங்கோவடிகள் மூன்றாவதாகக் கந்தழிக்கு முரணாக மாமழையைப் போற்றித் தொடங்குகிறார்.

21) தன்னுமைச் சமலை = self similarity

22) பகுவல் தோற்றம் = fractal appearance (பகுவற் படங்களைப் பார்க்க இணையத்தில் ஒரு தளமே இருக்கிறது. இதைப் பற்றி எழுதத் தொடங்கினால், ஏகப்பட்டவை இருக்கின்றன. தலைசுற்ற வைக்கும் விந்தைகள்.)

23) பகிர்த்த விளைவு = bifurcation (ஒரு புலத்தில் இருந்து இன்னொரு புலத்தைப் பிரித்துக் காட்டுவது.)

24) பட்டாம் பூச்சி விளைவு = butterfly effect (இதைப் பற்றியும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. கசகைப் பற்றிப் படிக்கும் போது இதை உணரலாம்.

25) ஆருடம் சொல்ல அமையாப் புலம் = unpredictable field

26) விந்தை ஈர்ப்பு = strange attractor

27) துருவளை நகர்வு = turbulent motion (துருவிச் சுழித்து வளையும் நகர்வு துருவளை நகர்வு. கசகைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய பின்தான், துருவளை நகர்வின் உள்ளாழங்கள் புரியத் தொடங்கின.)

28) கொளுவு = hypotheis

29) தொடக்கக் கட்டு = initial condition

30) மடக்கல் = exponentiation (2 என்ற எண்ணின் ஐந்தாம் மடக்கு 32.)

31) புதையடி = boots or shoes, மிதியடி போலப் புதையடி என்று சொல்லலாம். இங்கே குதிரைக் குளம்புக்கான இலாடத்தைக் குறிக்கிறது.

1 comment:

OK said...

Compact Disk (CD) = குறுந்தகடு